pcts_new
Untitled

சமூக அறப்பணி

ஜன்கல்யாண் முதியோர் இல்லம்

ஜன்கல்யாண், திரு.ராமன் என்ற தமிழ் அன்பரால் பான்வெலில் தொடங்கப்பெற்று இயங்கி வருகின்ற முதியோர் இல்லமாகும். இம்முதியோர் இல்லத்தில், 70 வ்யதிற்கு மேற்பட்ட சுமார் 60-70 முதியோர்களும், 100 குழந்தைகளும் உள்ளனர். இந்த இல்லம், கருணையுள்ளம் கொண்ட அன்பர்களின் ஆதரவினையும், அவர்தம் நன்கொடையையும் நம்பியே இயங்கி வருகின்றது. வெகு சமீபத்தில், திரு.ராமன் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட, அவரது மனைவி திருமதி.ராமன் அவர்கள் இந்த இல்லத்தை தற்போது நடத்தி வருகின்றார்.

நமது சங்கம், கடந்த 8 வருடங்களாக தவறாமல் இம்முதியோர் இல்லத்திற்கு ஆதரவளித்து வருகின்றது. புதிய புடவை, வேட்டி, துண்டு மற்றும் போர்வைகளை வழங்குவதுடன் அவர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை முதலிய உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவுகின்றது.

மஹர் - ஆதரவற்றோர் இல்லம்

கடந்த 2016-ஆம்வருடம் நமது சங்கம், புனேயில் வாட்காவொன்ஷேரியில் உள்ள ‘மஹர்’ ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள சுமார் 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டியது. குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில், மாயாஜால வித்தைகள் அடங்கிய சிறப்பு காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் பயனிற்கு உதவும் வகையில் அலமாரி ஒன்றும், புத்தகங்கள் வைப்பதற்கான அடுக்கு தட்டு ஒன்றும் நமது சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. குழந்தைகளின் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதோடு, அக்குழந்தைகளோடு நமது சங்கத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் மற்றும் இதர உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து மதிய உணவை உண்டு மகிழ்ந்தனர்.

இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு தேவையான போர்வை, உபயோகப்படுத்திய ஆடைகள், குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள், மளிகைப்பொருட்கள் முதலியனவும் நமது சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

மராத்தி மொழியில், “மஹர்” என்பதற்கு “தாய் வீடு” என்று பொருள். நம்பிக்கை, உரிமை மற்றும் புரிந்துக்கொள்ளுதலுக்கான புகலிடமாகவும் இந்த இல்லம் விளங்குகின்றது. இந்த இல்லத்தின் குறிக்கோள், வறுமையில் வாடும் மகளிரும், ஆடவரும் மற்றும் குழந்தைகளும் உயர்தரமான வாழ்க்கை வாழ்வதற்கான அவர்தம் உரிமையை நிலைநாட்டுவதற்கும், அதற்கான வழிவகைகளை கண்டறிந்து, இன, மத, ஜாதி, மொழி வேறுபாடின்றி அவர்களின் முன்னேற்றதிற்கும் பாடுபடுவதாகும்.

சஃபோஷ் - ஆதரவற்றோர் இல்லம்

சசூன் மருத்துவமனையால் நடத்தப்படும் ‘SOFOSH’ ஆதரவற்றோர் இல்லத்திற்கு ரூ.50,000/- நன்கொடையாக வழங்கப்பட்டது.

1973 ஆம் ஆண்டு SOFOSH , “ஸ்ரீவத்ஸா” என்ற குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகத்தை நிறுவியது. இந்த காப்பகம், துவங்கப்பெற்ற நாள் ஒன்று முதல், சமுதாயத்தால் கைவிடப்பட்டு ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளின் நலனில் முழு அக்கறை கொண்டு அதற்கென தன்னை அர்ப்பணித்தக் கொண்ட ஒரு கருணை இல்லமாகும். பெற்றத் தாயினாலேயே, தொடர்ந்து வளர்க்க இயலாத சூழ்நிலையில், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் இந்த காப்பகம் அடைக்கலம் கொடுக்கின்றது. அந்த வகையில், இந்த ஸ்ரீவத்ஸா காப்பகம், குடும்பம் என்று ஒன்று இல்லாமல் தவிக்கும், புதிதாக பிறந்த பச்சிளங்குழந்தை முதல் 6 வயதான குழந்தைகள் வரை அனைவருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும் தன்னிகரில்லா சேவையை ஆற்றி வருகின்றது.

இந்த காப்பகத்தில் வளரும் குழந்தைகள் மிக நல்ல முறையில் பார்த்துக்கொள்ளப்படுவதுடன், ஊட்டச்சத்து குறைப்பாடில்லாமல், முழு வளர்ச்சி பெறுவதற்கு தேவையான சத்தான உணவும், தேவைப்படும் போது கூடுதலான சத்துணவு வகைகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது. குழந்தைகளின் உடல் நலனை பேணும் வகையில் தேவைப்படும் மருத்துவ தேவைகளுக்கும் இந்த காப்பகம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மருத்துவ சேவையை செய்வதற்கு ந்மது சங்கத்தை சேர்ந்த திறமையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழு தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளது. குழந்தைகளின் வளர்ப்பில் தேவைப்படும்போது உரிய பயிற்சி/சிகிச்சையளிப்பது இன்றியமையாத தேவையாகும். அந்த வகையில் தேவைப்படும் குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி, உடல் இறுக்கத்தை தளர்த்துவதற்கான உருவதல் சிகிச்சை, விளையாட்டு பயிற்சி போன்றவையும் இந்த காப்பகத்தில் வழங்கப்படுகின்றது.

இந்த காப்பகத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தையின் தேவைக்கேற்ப அவர்களுக்கான நீண்டக்கால மறுவாழ்வு திட்டம் ஒன்று வகுக்கப்படுகின்றது. பெரும்பாலான குழந்தைகளின் மறுவாழ்வு, தத்து எடுத்துக் கொள்ளும் வகையில், அமைத்து தரப்படுகின்றது. SOFOSH-ன் மிக முக்கிய குறிக்கோள், தங்களின் காப்பகத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் அதை “காப்பகமாக” பாவிக்காமல் தங்களின் “வீடாக”வே கருதும் வகையில், “குடும்ப” சூழலை அவர்களுக்கு அமைத்து தருவதே.

இன்று, SOFOSH புனேயில் ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து கொள்ளும் அமைப்புகளுக்கு முன்னோடியாக, முன்னணி அமைப்பாக விளங்குகின்றது என்றே சொல்லவேண்டும்.

பிரசன்னா ஆட்டிசம் மையத்திற்கும், மானவியா தொண்டு நிறுவனத்திற்கும் நமது சங்கம் நிதியுதவி அளித்து வருகின்றது.

சென்னை வெள்ள நிவாரணப் பணி

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் நிவாரணத்திற்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள் வாங்கப்பெற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு நமது சங்க உறுப்பினர் பலரும் நிதி கொடுத்து உதவினர்.

கல்விக்கு உதவி

நமது தமிழ்ச்சங்கம் கடந்த 12 வருடங்களாக, தேவைப்படும் ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதியுதவி அளித்து வருகின்றது. மாணவர்களின் கல்விக்காக, ஆண்டு முழுவதற்குமான, கல்வி கட்டணத்தை சங்கம் ஏற்றுக்கொண்டு அதை செலுத்தி வருகின்றது.

அந்த வகையில் புனேவில் உள்ள காட்கியில் உள்ள எஸ் வி எஸ் உயர்நிலைப் பள்ளி/தொடக்கப் பள்ளியில் தகுதியான ஏழைக் குழந்தைகளுக்கு இது ஆதரவளித்துள்ளது. கடந்த  5-9-2019 - ஆசிரியர் தினத்தன்று, சமுதாயத்திற்கு நாங்கள் செய்த சேவையைப் பாராட்டி, இப்பள்ளியை நடத்தி வரும் “தமிழர்கள் சங்கம், காட்கி “இந்தச் சின்னத்தை எங்களுக்கு வழங்கியது.

இப்பள்ளியின் குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதோடு, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருதுகளையும் வழங்கி வருகிறோம்.

இது தவிர எங்களை கல்வி உதவிக்காக அணுகிய தனிப்பட்ட மாணவர்களையும் நாங்கள் ஆதரித்துள்ளோம். அவர்களில் ஒரு மாணவி எங்கள் ஆதரவில் படித்து எம்பிஏ பட்டம் பெற்று தற்போது பணிபுரிந்து வருகிறார். எஸ் வி யூனியன் உயர்நிலைப் பள்ளி ரஸ்தா பெத் மாணவர்களும் பயனாளிகள்.

ஒன்றோ (அ) அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அளிக்க விருப்பமுள்ள அன்பர்கள் எங்களின் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக்கொண்டு தங்கள் விருப்பத்தை பதிவு செய்து உதவலாம்.

punecitytamilsangam@gmail.com

கீழ் கண்ட புகழ் பெற்ற பேச்சாளர்கள் தங்கள் சொற்பொழிவை ஆற்றியுள்ளனர்.

  • திரு. சாலமன் பாப்பைய்யா

  • திரு. S. V. சேகர்

  • திரு. டெல்லி கணேஷ்

  • திரு. சுகிசிவம்

  • டாக்டர். சிவராமகிருஷ்ணன்

  • டாக்டர்.ஞானசுந்தரம்

  • திரு. மோஹனசுந்தரம்

இது வரை நடந்துள்ள கலாச்சார கலை நிகழ்ச்சிகள்.....

கீழ் கண்டோரின் நாடகங்கள்

  • திரு. TV வரதராஜன்

  • திரு. கிரேஸி மோஹன்

  • திரு. காத்தாடி ராமமூர்த்தி

  • திரு. மாப்பிள்ளை கணேஷ்

  • ரயில் ப்ரியா


  • கீழ் கண்டோரின் இசை நிகழ்ச்சிகள்

  • ஷ்யாம் கிரேஸி பாய்ஸ் க்ரூப்

  • ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ்

  • கணேஷ் மெலடீஸ்

  • திரு. செந்தில் அவர்களின் மாற்று குரல் நிகழ்ச்சி

இதை தவிர சங்கத்தின் திறமை பெற்ற கலைஞர்களை கொண்டு சங்கத்தின் மூத்த உறுப்பினரான திரு. V. S. நாகராஜன் அவர்களால் மூன்று நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

வரும் ஆண்டில் மற்றும் பல நிகழ்ச்சிகள் வர இருக்கின்றன

Untitled Document