நமது சங்கம், கடந்த 8 வருடங்களாக தவறாமல் பான்வெல் என்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றுக்கு ஆதரவளித்து வருகின்றது. புதிய புடவை, வேட்டி, துண்டு மற்றும் போர்வைகளை வழங்குவதுடன் அவர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை முதலிய உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவுகின்றது.
இந்த வருடம் (2016) சங்கத்தினர், புனேயில் வாட்காவொன்ஷேரியில் உள்ள ‘மஹர்’ ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள சுமார் 100 குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்ததுடன், தேவையான மளிகைப்பொருட்கள், உபயோகப்படுத்திய உடைகள், புத்தகம் வைப்பத்தற்கான அடுக்கு தட்டு, அலமாரி முதலியவற்றையும் வழங்கியுள்ளனர்.
சசூன் மருத்துவமனையால் நடத்தப்படும் ‘SOFOSH’ ஆதரவற்றோர் இல்லத்திற்கு ரூ.50,000/- நன்கொடையாக வழங்கப்பட்டது.
பிரசன்னா ஆட்டிசம் மையத்திற்கும், மானவியா தொண்டு நிறுவனத்திற்கும் நமது சங்கம் நிதியுதவி அளித்து வருகின்றது.
சென்னை வெள்ள நிவாரணப்பணிக்காக ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள் வாங்கப்பெற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு நமது சங்க உறுப்பினர் பலரும் நிதி கொடுத்து உதவினர்.
நமது தமிழ்ச்சங்கம் கடந்த 9 வருடங்களாக, தேவைப்படும் ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதியுதவி அளித்து வருகின்றது. மாணவர்களின் கல்விக்காக, ஆண்டு முழுவதற்குமான, கல்வி கட்டணத்தை சங்கம் ஏற்றுக்கொண்டு அதை செலுத்தி வருகின்றது.
அந்த வகையில், பூனேயில் உள்ள கட்கியில் இயங்கி வரும் SVS யூனியன் பள்ளியை சேர்ந்த சுமார் 100 குழந்தைகளுக்கு, ஒரு குழந்தைக்கு ஆண்டு கட்டணமாக ரூ.2000/- என்ற விதமாக, கல்விக்கென நிதியுதவி நமது சங்கம் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
ஒன்றோ (அ) அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அளிக்க விருப்பமுள்ள அன்பர்கள் எங்களின் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக்கொண்டு தங்கள் விருப்பத்தை பதிவு செய்து உதவலாம்.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பான்வெல் அருகே உள்ள ஜன்கல்யாண் முதியோர் இல்லத்திற்கு நமது சங்கம் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இம்முதியோர் இல்லத்தை பற்றி தெரியாத நமது சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், கீழ்காணும் குறிப்பை படித்து அதை பற்றிய விவரத்தை அறியலாம்.
ஜன்கல்யாணை பற்றிய சிறு குறிப்பு: ஜன்கல்யாண், திரு.ராமன் என்ற தமிழ் அன்பரால் பான்வெலில் தொடங்கப்பெற்று இயங்கி வருகின்ற முதியோர் இல்லமாகும். இம்முதியோர் இல்லத்தில், 70 வ்யதிற்கு மேற்பட்ட சுமார் 60-70 முதியோர்களும், 100 குழந்தைகளும் உள்ளனர். இந்த இல்லம், கருணையுள்ளம் கொண்ட அன்பர்களின் ஆதரவினையும், அவர்தம் நன்கொடையையும் நம்பியே இயங்கி வருகின்றது. வெகு சமீபத்தில், திரு.ராமன் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட, அவரது மனைவி திருமதி.ராமன் அவர்கள் இந்த இல்லத்தை தற்போது நடத்தி வருகின்றார்